24-ம் ஆண்டில் அந்நஜாத்!

in 2009 ஏப்ரல்

அந்நஜாத் ஏப்ரல் 2009
24-ம் ஆண்டில் அந்நஜாத்!

எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் ஈடு இணையில்லா கருணையைக் கொண்டு இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் அந்நஜாத் தனது 23 வருட பணியை நிறைவு செய்து 24-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.குர்ஆன் ஹதீஸ் போதனைகளுக்கு நேர் முரணான ஆலிம்-அவாம்; வேறுபாட்டை நீக்கி-புரோகிதம் முற்றிலுமாக வேரோடு வேரடி மண்ணோடு ஒழிந்து சமத்துவ சகோதரத்துவ ஒன்றுபட்ட சமுதாயம் (21:92, 23:52) உருவாகும் வரை அந்நஜாத் தொய்வின்றித் தொடர அகிலங்களையும், அனைத்துப் படைப்புகளையும், மனிதனையும் படைத்து ஒழுங்குபடுத்தி நிர்வகித்து வரும் சர்வ சக்தனான அல்லாஹ் தனது இணையில்லா உதவியை தொடர்ந்து நல்குவான் என்று அவன்மீது பூரண ஆதரவு வைக்கிறோம்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நன்மையை ஏவ வேண்டும் தீமையைத் தடுக்க வேண்டும் என்ற 9:71 இறைக்கட்டளைகளையும் அப்படிச் செயல்படுகிறவர்களே பூரண வெற்றி பெற முடியும் என்ற 103:1-3 இறைக் கட்டளைகளும் மக்களைச் சீர்திருந்த அனுப்பப்பட்ட நபிமார்களில் முஹம்மது(ஸல்) அவர்கள் இறுதி நபியாவார்கள். அவர்களுக்குப் பின்னர் எப்படிப்பட்ட நபியின் வருகையும் இல்லை. ஆனால் அந்த நபிமார்கள் செய்த சத்திய பிரசார பணி இறுதி நபிக்குப் பிறகு அவர்களின் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்ற 3:110 இறைக்கட்டளையும் மார்க்கப் பிரச்சாரத்தை முஸ்லிம் ஆண், பெண் அனைவரும் கூலி – சம்பளத்திற்காக அல்லாமல் அல்லாஹ்விடம் மட்டுமே கூலி- சம்பளத்தை எதிர்பார்த்துச் செய்ய வேண்டும் என்பதை அணுவத்தனையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதிப்படுத்துகின்றன.

நபி(ஸல்) அவர்கள் தமது விடைபெறும் ஹஜ்ஜில் இங்கு வந்திருப்பவர்கள் இங்கு வந்திருப்பவர்கள் இங்கு வராதவர்களிடம் இச்செய்திகளைக் கொண்டு சேருங்கள் என்று கட்டளையிட்டதும் என்னைப் பற்றி ஒரு செய்தி உங்களுக்குத் தெரிந்தாலும் அதை மற்றவர்களிடம் கொண்டு சேர்த்து விடுங்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளையும் மார்க்கப் பிரசாரம் ஆலிம்-அவாம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் செய்ய வேண்டும். அதற்குரிய கூலி-சம்பளத்தை மக்களிடம் எதிர்பார்க்கக் கூடாது, படைத்த அல்லாஹ்விடம் அதற்குரிய கூலியை எதிர்பார்க்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்த நிலையில் முஸ்லிம் சமுதாயத்தை ஆலிம் அவாம் என பிளவுபடுத்தி, மார்க்கப் பணியை ஆலிம் என்ற ஒரு சிறு கூட்டம் கூலி-சம்பளத்திற்காகச் செய்யவும், மற்ற பெருங்கூட்டம் அவர்கள் சொல்வதை அப்படியே கண்மூடி ஏற்று நடப்பதோடு அவர்களுக்கு அவர்களது பணிக்காக கூலி சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முற்றிலும் முரணான நடைமுறையை நீண்ட காலமாக அதாவது சுமார் 1000 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள்.

அதற்கு மேலும் இந்தப் புரோகித வர்க்கம் தங்களுக்குள் ஏற்படும் பொறாமை காரணமாகப் பல பிரிவுகளாகப் பிரிந்து முஸ்லிம் சமுதாயத்தை மேலும் பல பிரிவினர்களாக்கி அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அல்லாஹ்வின் எண்ணற்ற கட்டளைகளுக்கு முரணாக அற்பமான இவ்வுலக ஆதாயத்தில் மயங்கிக் கிடக்கிறார்கள். இன்று முஸ்லிம் சமுதாயத்தினர் அழிவின் அதலபாதாளத்தில் அமிழ்ந்து கிடப்பதோடு நாளை மறுமையில் நரகின் எரிகட்டைகளாக ஆகும் பரிதாப நிலையில் இருக்கிறார்கள்.

சமுதாயத்தின் இந்த இழி நிலைக்கு இம்மையிலும் இழிவு மறுமையிலும் நரக வேதனை என்ற ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பிற்கு-நட்டத்திற்கு ஆலிம் என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த புரோகித மவ்லவிகளே காரணம் என்பதைத் திட்டமாக அறிந்த பின்னரே 1983 முதல் எமது இந்த பிரச்சார பணியை ஆரம்பித்தோம். 1986 முதல் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழை தொய்வின்றி அல்லாஹ்வின் அருளால் நடத்தி வருகிறோம்.

ஆதம்(அலை) அவர்களிலிருந்து இறுதி நபி(ஸல்) வரை அனைத்து நபிமார்களுக்குப் பிறகும் இறுதி நபிக்குப் பிறகும் அனைத்து சமுதாயங்களிலும் திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டு ஷைத்தானுக்கு உறுதுணையாகச் செயல்பட்டு மனித சமுதாயத்தின் மிகப் பெரும் கூட்டத்தை நரகில் கொண்டு சேர்ப்பவர்களே மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் என்பதைத் திட்டமாக அறிந்த பின்னரே அவர்களை அடையாளம் காட்டும் பணியை அந்நஜாத் ஆரம்பித்தது.

இப்புரோகிதர்களை அடையாளம் கண்டு கொள்ள மிக எளிய வழி. அவர்கள் அல்லாஹ்வுக்காக மார்க்கப் பணி செய்ய மாட்டார்கள் கூலிக்காக சம்பளத்திற்காக மட்டுமே மார்க்கப்பணி புரிவார்கள். சம்பளம் இல்லாவிட்டால் நாங்களும் எங்கள் குடும்பமும் எப்படி உயிர் வாழ்வது? என்பார்கள். வழிகேட்டில் சென்று நரகில் விழும் மக்களும் அதைச் சரி காண்பார்கள். மற்றபடி அனைத்து நபிமார்களும் நபி தோழர்களும் 4 இமாம்களும் அன்றைய ஆலிம்களும் அவர்கள் அனைவரின் குடும்பத்தினரும் மக்களிடம் எவ்விதக் கூலியையும் – சம்பளத்தையும் வாங்காமல் எப்படி உயிர் வாழ்ந்தார்கள் என்று சிந்திக்க மாட்டார்கள். இத்தனைக்கும் நபிமார்கள் அனைவரும் மார்க்கப் பணியை தங்களின் முழுநேரப் பணியாகக் கொண்டிருந்தார்கள். அப்படி இருந்தும் மக்களிடம் கூலி – சம்பளம் வாங்கவில்லை. இப்புரோகிதர்களோ ஒரு நாளில் ஓரிரு மணி நேரத்தை மட்டும் செலவிட்டு விட்டு மக்களிடம் சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள் கேட்கிறார்கள்.

சம்பளத்திற்கு மார்க்கப் பணி புரிவதால்தான் ஆலிம்-அவாம் வேறுபாட்டை உண்டாக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். அதனால்தான் சொல்வதற்கென்று ஒரு சிறு கூட்டம்-ஆலிம் கூட்டம் அதைக் கேட்பதற்கென்று ஒரு பெருங்கூட்டம்-அவாம் கூட்டம் ஆக புரோகிதர்கள் வாங்கும் கூலியே ஒன்றுபட்ட சமுதாயத்தைப் பிளவுபடுத்துக் காரணமாகின்றது.

அது மட்டுமல்ல: நாங்கள்தான் மவ்லவிகள் – ஆலிம்கள் எங்களுக்கே மார்க்கத்தில் அதிகாரம் உண்டு. நாங்கள் சொல்வதை அப்படியே கண்மூடி ஏற்று நடப்பதே உங்கள் கடமை என ஆணவத்துடன் திமிராகப் பேச முடிகிறது. அவர்கள் வாங்கும் கூலியே அவர்களை இப்படி அகங்காரத்துடன் பேசி சமுதாயப் பிளவை ஏற்படுத்தி வழி வகுக்கிறது.

புரோகித மவ்லவிகள் தங்களை நபிமார்களி;ன் வாரிசுகள் என்று கூறுவதிலும் முழுப் பொய்யர்களே காரணம் நபிமார்கள் சம்பளத்திற்காக மார்க்கப் பணி புரியவில்லை. மேலும் நபிமார்கள் அல்லாஹ் வஹீ மூலம் அறிவித்த நேர்வழியை விட்டுச் சென்றார்களே அல்லாமல் தீனாரையோ திர்ஹத்தையோ மற்றும் உலகப் பொருட்களையோ விட்டுச் செல்லவில்லை.

எனவே சம்பளம் வாங்காமல் வஹி மூலம் அறிவித்த நேர்வழியை விட்டுச் சென்றார்களே அல்லாமல் தீனாரையோ திர்ஹத்தையோ மற்றும் உலகப் பொருட்களையோ விட்டுச் செல்லவில்லை.

எனவே சம்பளம் வாங்காமல் வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட செய்திகள் அடங்கிய அல்குர்ஆனிலுள்ளவற்றை எவ்வித கூடுதல் குறைவு இன்றி உள்ளது உள்ளபடி மக்களுக்கு எடுத்துச் செல்பவர்கள் மட்டுமே நபிமார்களின் வாரிசுகளாக இருக்க முடியும். அவர்கள் அரபி படித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதற்கு மாறாக அரபி மொழியையும் குர்ஆன் ஹதீஸையும் கரைத்துக் குடித்த பெரும் மேதைகளாக இருந்தாலும் நபிமார்கள் மார்க்கப் பணியை மக்களிடம் கூலியைக் கேட்காமல் செய்ததை நிராகரித்துவிட்டு மக்களிடம் சம்பளத்தை எதிர் பார்த்து – கேட்டு மார்க்கப் பணி செய்கிறவர்கள் நபிமார்களின் வாரிசுகளாக ஒருபோதும் இருக்க முடியாது. மாறாக அவர்கள் அபூ ஜஹீலின் வாரிசுகளாக மட்டுமே இருக்க முடியும்.

அபூ ஜஹீல் அரபி மொழியில் பெரம் வல்லுநராக மேதையாக, கவிஞனாக இருந்தான். அபுல் ஹிக்கம் என்று அரபு மக்களால் அழைக்கப்பட்டவன் எப்படி அபூ ஜஹீல் ஆனான்? ஆம்! இன்றைய புரோகித மவ்லவிகளைப் போல் மார்க்கப் பணியை கூலிக்கு-சம்பத்திற்கு செய்தான். அன்றைய தாருந்நத்வா என்ற உலமாக்கள் சபையும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகித சபையாகவே இருந்தது. எனவே அவர்கள் அரபி மொழியில் பண்டிதர்களாக இருந்த நிலையிலும் அறைவனால் இறக்கியருளப்பட்ட நேர்வழி நெறிநூல் அல்குர்ஆனின் போதனைகளை அவர்களால் விளங்கி ஏற்க முடியவில்லை. 2:170 இறைக் கட்டளை கூறுவது போல், அவர்களின் முன் சென்ற அறிஞர்களின் நடைமுறைகளைச் சரி கண்டே செயல்பட்டார்கள். நரகிற்கு இறையானார்கள்.

அதற்கு மாறாக அரபி மொழி எழுத்தறிவோ, படிப்பறிவோ இல்லாத பாமர மக்கள் அல்குர்ஆன் போதனைகளை மிகத் தெளிவாக விளங்கினார்கள். அதன்படி நடந்து வெற்றி பெற்றார்கள். சுவர்;க்கவாசிகளாக ஆகிவிட்டார்கள். அவர்களே அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்க அறிஞர்கள். (பார்க்க 62:2)

அதேபோல் இன்றைய அரபி படித்த புரோகித மவ்லவிகள் சம்பளத்திற்காக மார்க்கப் பிரசாரம் செய்வதால், அபூ ஜஹீலைப் போல் அரபியில் பண்டிதர்களாக இருந்தாலும் அல்குர்ஆனின் நேரடிப் போதனைகளை அவர்களால் விளங்க முடியவில்லை. அபூ ஜஹில் வகையறாக்கள் சொன்னது போல், அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முன் சென்ற அறிஞர்கள் தந்த விளக்கப்படியே செயல்பட வேண்டும் என்ற அபூ ஜஹீல் வாதத்தையே வைக்கின்றனர். முன் சென்றவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்தது பற்றி உங்களிடம் கேட்கப்படாது, நீங்கள் அல்குர்ஆனை விளங்கிச் யெல்பட்டீர்;களா? என்றே உங்களிடம் கேட்கப்படும் என்று 2:134,141 இரண்டு இடங்களில் அல்லாஹ் கூறி இருந்தும் அதை உய்த்துணரும் ஆற்றல் இந்தப் புரோகித மவ்லவிகளிடம் இல்லை.

ஆக புரோகித மவ்லவிகள் அல்லாஹ் 9:9,34,31:6 இறைக் கட்டளைகளில் கூறி இருப்பது போல் மக்களை கோணல் வழிகளில் இட்டுச் சென்று நரகை நிரப்ப இருக்கிறார்கள் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிந்து கொண்ட பின்னரே அவர்களை அடையாளம் காட்டி, மக்களை அவர்களின் வசீகர, மாய, உடும்புப் பிடியிலிருந்து விடுவிக்க அந்நஜாத்தின் பணியைத் தொடர்கிறோம். கூலி-சம்பளம் வாங்கும் காலமெல்லாம் அவர்கள் நேர்வழிக்கு வரவே மாட்டார்கள் என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கைகளே அவர்களை அடையாளம் காட்டி, அவர்களின் முகத் திரையை கிழித்தெறியும் துணிச்சலை எமக்குத் தந்தது.

எனவே சகோதர, சகோதரிகளே திட்டமாக அறிந்து கொள்ளுங்கள். குர்ஆன், ஹதீஸை எடுத்து எழுதுவதற்காக அந்நஜாத் ஆரம்பிக்கப்படவே இல்லை. அல்லாஹ்வுடைய கிருபையைக் கொண்டு அல்குர்ஆனின் மொழி பெயர்ப்புகள் இன்று பொரும்பாலான மொழிகளில் கிடைக்கின்றன. அவற்றை நேரடியாகப் பார்த்து அல்குர்ஆனின் போதனைகளையும், கட்டளைகளையும், ஏவல், விலக்கல்களையும் அறிந்து கொள்ள முடியும். அதே போல் ஆதாரபூர்வமான ஹதீஸ்களைப் பார்த்து நபி(ஸல்) அவர்களின் நடைமுனைகளை அறிந்து கொள்ள முடியும்.

புரோகித மவ்லவிகளின் வசீகர, மாய, உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆன், ஹதீஸ் மொழி பெயர்ப்புகளைப் பார்த்து சிந்தித்து விளங்கி அதன்படி நடக்க முன் வந்தவர்களுக்கு அந்நஜாத்தின் உதவி தேவையே இல்லை.

புரோகித மவ்லவிகளின் வசீகர, ஷைத்தானிய, மாய உடும்புப் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கவே அந்நஜாத் ஆரம்பத்திலிருந்து பாடுபட்டு வருகிறது. குர்ஆன் வசனங்களிலும், ஹதீஸ்களிலும் இப்புரோகிதர்கள் தங்கள் கைவரிகையைக் காட்டி, சுய கருத்துக்களைப் புகுத்தி அர்த்தத்தை அனார்த்தமாக்கி மக்களை வழிகெடுக்கும் நிலையை, அதாவது தங்களின் மத்ஹபுகளை, தரீக்காக்களை, இயக்கங்களை நியாயப்படத்தும் இடங்களில், அவர்களது பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி மக்களை வழிகேடுகளான மத்ஹபுகள், தர்கா, தரீக்காக்கள், இயக்கங்கள், அமைப்புகள் இவற்றிலிருந்து விடுவிக்கத் தேவையானவற்றையே அந்நஜாத் வெளியிடுகிறது.

அந்த நேரத்திலும் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களின் அத்தியாய எண் வசன எண் இவற்றையே அந்நஜாத்தில் எழுதுகிறோம். காரணம் மக்களுக்கு குர்ஆனோடு நேரடி தொடர்பு ஏற்படவேண்டும். அவர்கள் நேரடியாக குர்ஆனைப் புரட்டி சம்பந்நப்பட்ட வசனங்களை நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்க வேண்டும் என்ற நன்நோக்கிலேயே குறிப்பிட்ட வசனங்களை பெரும்பாலும் எழுதாமல் விடுகிறோம். சில சகோதரர்கள் அந்நஜாத்தைப் படிக்கும் எல்லா நேரங்களிலும் குர்ஆனை எடுத்துப் பார்க்க வாய்ப்பு ஏற்படாது. எனவே வசனங்களை எடுத்து எழுதுங்கள் என்கிறார்கள். அந்நஜாத் பொழுதுபோக்கும் இதழ் அல்ல. இது பழுது நீக்கும் அதழாகும். எனவே அந்நஜாத்தைக் கொண்டு உரிய பலனை அடைய விரும்புகிறவர்கள் அதற்கென்று நேரத்தை ஒதுக்கி அல்குர்ஆனை பக்கத்தில் எடுத்து வைத்துக் கொண்டு அந்நஜாத்தைப் படித்து குறிப்பிட்ட வசனங்களை அல்குர்ஆனில் பார்த்து படித்து விளங்கும் போதே அது அவர்களின் உள்ளங்களில் பதியும்.

யார் கேட்டாலும் உடனே அல்குர்ஆனை எடுத்துக் காட்டி விளக்க முடியும். அதற்கு மாறாக அந்நஜாத்திலேயே அந்த வசனங்கள் அனைத்தையும் எடுத்து எழுதி விட்டால், யாரும் கேட்டால் அந்நஜாத்தைத் தூக்கிப் பிடிப்பார்கள், காட்டுவார்கள். இறுதியில் அந்நஜாத்தும் ஒரு பிக்ஹு நூலாகிவிடும். நாளை அதுவும் ஒரு மத்ஹபாகி விடும். அதைத் தவிர்க்கவே அந்நஜாத் மக்களை புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுவித்து நேரடியாக குர்ஆன், ஹதீஸை சுயமாக தன்நம்பிக்கையுடன் பார்த்து படித்து சிந்தித்து விளங்கி அதன்படி நடக்கும் பயிற்சியை கொடுத்து வருகிறது. அதனால்தான் எண்களைக் குறிப்பிடாமல் வசனங்களையே எடுத்து எழுதுங்கள். அதனால் பலன் அதிகமாகக் கிடைக்கும். வாசகர் வட்டம் பெருகும் என்று பல சகோதரர்கள் வற்புறுத்தியும் அதற்கு நாம் உடன்படுவதாக இல்லை.

அந்நஜாத்தின் அசல் குறிக்கோள் புரோகிதம் முற்றிலுமாக ஒழிய வேண்டும். ஆலிம்-அவாம் வேறுபாடு ஒழிய வேண்டும். தர்கா, தரீக்கா, மத்ஹபுகள், இயக்கங்கள், அமைப்புகள் போன்ற சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் அனைத்தும் ஒழிய வேண்டும். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் குர்ஆனையும், ஹதீஸையும் நேரடியாகப் பார்த்து படித்து சிந்தித்து விளங்கிச் செயல்பட வேண்டும் என்பதே.

ஆலிம்களை மிகக் கடுமையாகச் சாடுகிறோம். திட்டுகிறோம் என்று எம்மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மார்க்கத்தை மதமாக்கி, நாங்கள்தான் ஆலிம்கள், மார்க்கம் தற்றவர்கள், அவாம்களாகிய நீங்கள் நாங்கள் சொல்வதுபடி தான் நடக்கவேண்டும். புரோகித மதரஸாவில் தெண்டச்சோறு சாப்பிடாதவர்கள் எப்படி ஆலிமாக இருக்க முடியும்? அவர்கள் அவாம்களே என ஆணவம் பேசுகிறவர்கள். திமிராக நடப்பவர்கள் நபிமார்களின் வாரிசாக இருக்க முடியுமா? ஒரு போதும் முடியாது. அபூ ஜஹீலின் வாரிசுகளாக மட்டுமே இருக்க முடியும்.

மேலும் அப்படிப்பட்டவர்கள் வானத்தின் தீழுள்ள படைப்புகளிலேயே மிகவும் கேடுகெட்டவர்கள், இழிவானவர்கள் என்று அல்குர்ஆன் கூறுவதை நிராகரிக்க முடியுமா? இவர்கள் குர்ஆனை கற்றிருந்தும், ஹதீஸ்களை அறிந்திருந்தும், அதாவது இறை அத்தாட்சிகளைப் பெற்றிருந்தும் அவற்றை விட்டு முற்றிலும் நழுவி நடக்கிறார்கள். அதனால் அவர்களை ஷைத்தான் பின் தொடர்கிறான்.

இவர்களை அல்லாஹ் தனது அத்தாட்சிகளைக் கொண்டு உயர்த்தாதற்குக் காரணம். மார்க்கப் பணியை சம்பளத்திற்கு செய்வதால் இவ்வுலக வாழ்வை பெரிதாக மதித்து தங்களுடைய இச்சைகளையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் நாயைப் போன்றவர்கள். அல்குர்ஆனின் நேரடிக் கருத்துக்களை திரித்து, வளைத்து, மறைத்துக் கூறி அவ்வசனங்களைப் பொய்யாக்கி, தங்களின் தர்கா, தரீக்கா, மத்ஹபு, இயக்கம், அமைப்பு இவற்றைத் தூக்கிப் பிடிப்பதால், அல்லாஹ் பெயர் சூட்டிக் கொடுத்த (22:78) ‘முஸ்லிம்’ என்ற பெயரையும், நபி(ஸல்) நடைமுறைப் படுத்திக்காட்டி, அந்த ஜமாஅத்திலேயே முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே சமுதாயமாக (21:92, 23:52) ‘ஜமாஅத் அல்முஸ்லிமீன்’ பேரியக்கத்தில் இருப்பதையும் நஞ்சென வெறுத்து அது அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் என்பவர்கள் யாராக இருக்க முடியும்?

1988-ல் இவர்கள் பெயர் சூட்டி அமைத்த ‘ஜாக்’ ஜமாஅத்தை கமாலுத்தீன் மதனீ ஜமாஅத் என சொல்லாதவர்கள், 2005-ல் இவர்களாகப் பெயர் சூட்டி அமைத்த ‘ததஜ’ ஜமாஅத்தை பீ.ஜே. ஜமாஅத் என்று சொல்லாதவர்கள். 22:78-ல் அல்லாஹ் நமக்கு இதற்கு முன்னரும், இதிலும் உங்களுக்கு முஸ்லிம் என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெயர் சூட்டினான் என்று கூறி இருக்க 1430 வருடங்களுக்கு முன்னரே நபி(ஸல்) அவர்கள் ‘ஜமாஅத் அல் முஸ்லிமீன்’ நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்க அது அபூ அப்தில்லாஹ் ஜமாஅத் என நாக்கூசாமல் கூறித்திரிபவர்கள். எந்த அளவு நெஞ்சழுத்தமும், இறை நிராகரிப்பும் உடையவர்களாக இருப்பார்கள். அல் அஃராஃப் 7:175-179 இறை எச்சரிக்கைகள் இவர்களுக்குப் பொருந்துமா? இல்லையா? என்று நிதானித்து முடிவெடுங்கள். 2:159,161,162 இறைக் கட்டளைகள்படி அப்படிப்பட்டவர்களை எவ்வளவு கடுமையாகத் திட்டினாலும், சபித்தாலும் அது அல்லாஹ்வின் கட்டளைப்படி நடப்பதேயாகும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

பிரிவினை வாதிகள் யாராக இருந்தாலும் நாங்கள் மட்டும்தான் நேர்வழியில் இருக்கிறோம். எங்களோடு வந்து இணைந்து வெற்றி பெறுங்கள் என்றே கூறுவார்கள். எங்களதுதான் தவ்ஹீது பேரியக்கம் என்பார்கள். இவை அனைத்தும் வழிகேடே என்பதற்கு அவர்களே ஆதாரம் தருகிறார்கள் என்பதை 4:49, 53:32 இறைக் கட்டளைகளை அல்குர்ஆனில் நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்குகிறவர்கள் மட்டுமே உணர முடியும். நேர்வழி நடப்பவர்கள் மட்டுமே அல்லாஹ் அவனது தூதர் மூலம் காட்டித் தந்த வழியே நேர்வழி என்பார்கள். அதுபோல் குர்ஆன், ஹதீஸிற்கு சுய விளக்கம் கொடுக்காமல், அவற்றில் கூட்டாமல், குறைக்காமல் உள்ளது உள்ளபடி எடுத்து நடப்பதே நேர்வழி என்று அந்நஜாத் கூறுகிறது.

Previous post:

Next post: