ரமழான் இரவுத் தொழுகையும், லைலத்துல் கத்ருடைய நாளும்!

in 2010 ஆகஸ்ட்,பிறை,ரமளான்

நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் பகலில் நோன்பு நோற்பது கடமையாகவும், இரவில் நின்று வணங்குவது ஏற்றம் தரும் செயலாகவும் இருக்கிறது. நன்மைதரும் செயல்கள் என்றால் நிச்சயமாக அச்செயல்கள் அல் அஹ்ஜாப் 33:21, 36 இரு இறைவாக்குகளில் குறிப்பிட்டிருப்பது போல் கண்டிப்பாக அவை இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களால் நடை முறைப்படுத்திக் காட்டித் தந்தவையாக மட்டுமே இருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாது, பின்னால் வந்த பெரியார்கள், சாதாத்துகள், இமாம்கள் காட்டித் தந்ததாகச் செய்யப்படும் செயல்கள் நற்செயல்களாக இல்லாமல், வழிகேட்டுச் செயல்களாகி நம்மை நரகில் தள்ளி, அங்கு வேதனை தாங்க இயலாது, ஒப்பாரி வைக்க நேரிடும் என்பதை அதே அல்அஹ்ஜாப் 33:66, 67,68 இறைவாக்குகள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் எச்சரிக்கின்றன.

இந்த இறைவாக்குகளை நமது கவனத்தில் கொண்டு ரமழான் இரவுத் தொழுகையையும், லைலத்துல் கத்ருடைய நாளையும் பற்றி குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் கொண்டு கவன மாக ஆராய்வோம். 2:183, 184, 185 ஆகிய மூன்று வசனங்களில் நோன்பு நோற்பதின் அவசியம் பற்றி அல்லாஹ் அழகாக எடுத்துக் கூறுகிறான். 97:1-5 ஐந்து இறைவாக்குகளில் லைலத்துல் கத்ர் என்ற நாளின் சிறப்பையும், மேன்மையையும், அந்நாளில் இடம்பெறும் சம்பவங்களையும், ஆயிரம் மாதங்களைவிட சிறப்புக்குரிய அந்த நாள் அதிகாலை பஜ்ரில் ஆரம்பித்து பஜ்ரில் முடிகிறது என்ற விபரத்தையும் அல்லாஹ் அறியத்தருகிறான்.

ரமழான் இரவுத் தொழுகை பற்றி, நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளும், அறிவ ரைகளும் பல ஹதீஸ் நூல்களில் காணக் கிடைக்கின்றன. அவற்றை விரிவாக முதலில் 1986 மே நஜாத் இதழிலும் அதன் பின்னர் மறுபதிப்பாக சில அந்நஜாத் இதழ்களிலும் வெளியிட்டுள்ளோம். ஆகஸ்ட் 2008 இதழிலும் அத்தொழுகை பற்றிய விபரங்கள் இருக்கின்றன. நபி(ஸல்) அவர்கள் ரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் இரவில் 8+3=11 ரகாஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை என்று வலியுறுத்திச் சொல்லும் செய்தி பெரும்பாலான ஹதீஸ் நூல்களில் ஆதாரபூர்வமாகக் கிடைக்கிறது. ஓரிரு ஹதீஸ்களில் 13 என்று வருகிறது. இரவில் இறுதிப் பகுதியில் தொழும்போது, அதன் பின்னர் தொழும் பஜ்ரின் சுன்னத் 2 ரகாஅத்தையும் சேர்த்து 13 ரகாஅத்துகள் என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால் எந்த ஒரு ஹதீஸ் நூலிலும் நபி(ஸல்) 20+3 ரகாஅத்துகள் தொழுதாக ஆதாரபூர்வமான செய்தியாக இல்லை. ஒரேயொரு பலவீனமான ஹதீஸ் மட்டுமே காணப்படுகிறது.

அதேபோல் உமர்(ரழி) அவர்கள் 20+3 தொழுதார்கள், தொழ ஏற்பாடு செய்தார்கள் என்ற செய்திகளும் பலவீனமான அறிவிப்புகளாகவே காணப்படுகின்றன. “ரமழான் ஒரு வாழ்வியல் பார்வை’ தொகுப்பு மெளலவி ஹாபிள் அ.முஹம்மது அப்துல் காதிர் ஹஸனீ என்பவர் அந்நூலின் 40ம் பக்கம் உமர்(ரழி) அவர்களின் நடைமுறையும் சுன்னத்துதான் என்று 33:36 இறைக் கட்டளைக்கு முரணாகவும், உமர்(ரழி) இரண்டு நபி தோழர்களுக்கு 8+3=11 ரகாஅத்துகள் தொழ வைக்கக் கட்டளையிட்டதை வசதியாக மறைத்துவிட்டு நபி(ஸல்) காலத்தில் மக்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தார்கள் என்பது போல், உமர்(ரழி) காலத்தில் மக்கள் இருபது(20) ரகாஅத்துகள் தொழுதார்கள் என்பதைப் பெரிய ஆதாரமாக எடுத்து வைத்துள்ளார். ஆனால் ஆதாரபூர்வமான செய்திகளில் இரண்டு நபிதோழர்களுக்கு 8+3=11 ரகாஅத்துகள் தொழ வைக்க கட்டளையிட்டதாகவே வருகிறது. மேலும் சிறு, சிறு தனித்தனி ஜமாஅத்துகளாக தொழுத மக்களை ஒரே இமாமின் பின்னால் ஒரே ஜமாஅத்தாக தொழும்படி ஏற்பாடு செய்ததாகவே புகாரியில் காணப்படுகிறது. அப்போதும் முன்னிரவில் தொழுவதை விட பின்னிரவில் தொழுவதே மிகவும் ஏற்றமாகும் என்று உமர் (ரழி) சொன்ன செய்தியும் புகாரீயில் பதிவாகியுள்ளது. (புகாரீ பாகம்2, ஹதீஸ் 2010)

இரவுத் தொழுகை, ரமழான் இரவுத் தொழுகை, தஹஜ்ஜுத், வித்ர் போன்ற பெயர்களில் இந்த இரவுத் தொழுகை பற்றி ஹதீஸ்களில் காணப்படுகிறது “தராவீஹ்” என்ற பெயரில் ஒரே ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸும் இல்லை என்பதே உண்மையாகும். இந்த நிலையில் மார்க்கத்தைப் பிழைப்பாக்கி அல்லாஹ்வுக்காக தொழவைக்க வேண்டிய இத்தொழுகையை பணத்திற்காகத் தொழவைக்கும் கட்டாயம் இந்த மவ்லவிகளுக்கு ஏற்பட்டுள்ளதால் 8+3=11 என்பதை 20+3=23 என்று அதிகப்படுத்தியும், ராகத்தாக இருந்து, எக்ஸ்பிரஸ் வேக தொழுகை இரண்டிரண்டு ரகாஅத்துகளுக்கிடையில் அமர்ந்து 7:55, 205 இறைக் கட்டளைகளுக்கு முரணாக சப்தமாக பிரார்த்தனையும்(துஆ) இறை தியான மும்(திக்ர்) செய்வதோடு, அத்தொழுகைக்கு “தராவீஹ்” என்ற பெயரையும் கற்பனை செய்துள்ளார்கள். இதன் உச்சக்கட்ட வினோதம் என்னவென்றால் முழு குர்ஆனை 26 நாட்களில் முடிக்க வேண்டும் என்ற புது நியதியையும் உருவாக்கி அதைப் பொறுமையாகத் தொழுதால் நேரம் ஆகிவிடும் என்றும் புயல் வேகத்தில் 20 ரக்அத்துகள் 1 மணி நேரத்திற்குள்ளாகவே தொழுவது தான்; இப்படிப்பட்ட தொழுகை கூடுமா – கூடாதா என்பது வேறு விஷயம்.

அல்லாஹ்வைத் தொழுவதில் அதிகப்படுத்தினால் என்ன தீமை ஏற்பட்டுவிடப் போகிறது? நன்மைதானே? என்று கூறி தங்களின் ஆதர வாளர்களை இந்த மவ்லவிகள் ஏமாற்றலாம். 33:21, 36, 66, 67, 68 இறைவாக்குகளை முறைப்படி படித்து விளங்கியவர்கள் இந்தத் தவறான வாதத்தை வைக்கமாட்டார்கள். ஒவ்வொரு வரும் தனித்தனியாக அவர்களாக விரும்பி உபரியாக (நஃபில்) எத்தனை ரகாஅத்துகள் தொழுதாலும் அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் நபி(ஸல்) தொழுது காட்டியது- சுன்னத் என்று பொய்யாகக் கூறி ஜமாஅத்தாக தொழுவது பித்அத்-வழிகேடு என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளதையே எடுத்துச் சொல்லுகிறோம். நபி(ஸல்) அவர்கள் சொல்லாததை, செய்யாததை யார் பொய்யாக நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக, செய்ததாகச் சொல்கிறார்களோ, அவர்கள் தங்களின் இருப்பிடத்தை நரகில் தேடிக்கொள்ளட்டும் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை உண்மையான இறை நம்பிக்கை உடையவர்கள் மட்டுமே உள்ளச்சத்துடன் மதித்து நடப்பார்கள்.

புகாரீ முதல் பாகம் 731வது ஹதீஸ் “ரமழான் இரவுத் தெழுகையை உங்களது இல்லங்களிலியே தொழுது கொள்ளுங்கள்! கடமையான தொழுகை தவிர மற்றத் தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்’ என்று நபி(ஸல்) கட்டளையிட்டிருப்பது இஷாவுக்குப் பிறகு பள்ளியில் ரமழான் இரவுத் தொழுகையை (தராவீஹ்) ஜமாஅத்தாக நடத்துவது “பித்அத்’ என்பதையே உணர்த்துகிறது.

கேவலம் அத்தொழுகை மூலமாகக் கிடைக்கும் அற்பமான கூலி-சம்பளத்தைக் குறிக் கோளாகக் கொண்டு அல்லாஹ்வின், அவனது தூதரின் கட்டளைகளை நிராகரிக்கிறார்கள் என்பதையே சுட்டிக் காட்டுகிறோம். அந்தச் சம்பளத்திற்காகத்தான் 20+3=23 என்று அதிகப்படுத்தியும், முழு குர்ஆனையும் ஓதி முடிக்க வேண்டும் என்ற விதிமுறையையும், ஜமாஅத்தாகத் தொழுவதையும் இவர்களாக விதித்திருக்கிறார்கள் என்பதை 42:21, 49:16, 9:31 இறைக் கட்டளையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறோம். இது இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய குற்றம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஜகாத் விஷயத்தில் கலீஃபாக்களின், நபி தோழர்களின் செயல்பாடுகள் மார்க்கம் ஆகாது என்று உரத்தக் கூறும் ததஜவினர் ரமழான் இரவுத் தொழுகையை ததஜ பள்ளிகளில் அதுவும் இஷாவுக்குப் பிறகு ஜமாஅத்தாக நடத்துவது அவர்களும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்பதையே உறுதிப்படுத்துகிறது.

அடுத்து நாள் ஆரம்பிக்கும் விஷயத்திலும் பெரும் தவறிழைக்கிறார்கள். காலையில் உதித்து மாலையில் மறையும் பிறையைப் பார்த்து, பிறை பிறந்துவிட்டது என்று கூறி நாள் மஃறிபிலிருந்து ஆரம்பித்து மஃறிபில் முடிகிறது என்று தவறாகக் கூறி மக்களை வழிகெடுக்கிறார்கள். அதனால் மக்கள் 21, 23, 25, 27, 29 ஐந்து ஒற்றைப்படை நாட்களில் தேடி அடைய வேண்டிய கத்ருடைய நாளை 22,24,26,28, 30 இரட்டைப்படை நாட்களில் தேடி பெரும் நட்டம் அடைகிறார்கள். ஆனால் நாள் அதி காலை பஜ்ரிலிருந்து ஆரம்பித்து பஜ்ரில் முடிகிறது. லைலத்துல் கத்ரின் நாள் பஜ்ரில் முடிகிறது என்று 97:5 இறைவாக்கும், 2:238 இறைவாக்கில் வரும் நடுத்தொழுகை அஸருடைய தொழுகை என நபி(ஸல்) தெளிவு படுத்தியிருப்பதும், இன்னும் சில ஹதீஸ்களும் நாள் பஜ்ரில் ஆரம்பித்து பஜ்ரில் முடிகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

காலையில் உதித்து மாலையில் மறையும் பிறையைப் பார்த்து பிறை பிறந்துவிட்டது, நாள் ஆரம்பித்துவிட்டது என்று தவறாகக் கூறுவதும், நாள் என்ற கருத்தில் “லைலத்” என்ற அரபி பதம் வரும் இடங்களில் இரவு என்று தவறாக மொழி பெயர்ப்பதும் தவிர வேறு உருப்படியான எந்த ஆதாரமும் நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்பதற்கு மவ்லவிகளிடம் இல்லை. அதாவது அல்குர்ஆன் 6:116ல் அல்லாஹ் கூறுவது போல் அந்தப் பெரும்பான்மையினரிடம் இருப்பது வெறும் யூகமும், கற்பனையும் மட்டுமே. மற்றபடி நேர்வழி அவர்களிடம் இல்லை. அதனால் ரமழான் முதல் நோன்பை நோற்று முடித்தபின் அன்று இரவு தொழ வேண்டிய ரமழான் முதல் இரவுத் தொழுகையை ­ஃபான் கடைசி இரவில் முன் கூட்டியே தொழுகிறார்கள். கடைசி ரமழான் இரவுத் தொழுகையை ஒருநாள் முன்கூட்டியே முடித்து விடுகிறார்கள். பிறை 29-ல் முடியும் ரமழான் மாதத்தில் லைலத்துல் கத்ர் இரவு பிறை 29-ல் இருக்குமானால் பிறை 28 இரவில் தொழுவதன் மூலம் ஆயிரம் மாதத்திற்குரிய அரிய பலனை இழக்கிறார்கள்.

இப்படி அல்லாஹ்வின் எண்ணற்ற நேரடிக் கட்டளைகளுக்கு முரணாக(ம்)தீனை (வீ) தீனுக்காக ஆக்கிக்கொண்டதால் அல்குர்ஆன் 2:41,42, 79, 3:78, 187, 188, 4:44,46, 5:41, 63, 6:21, 25, 26, 9:9,10,34, 11:18,19, 31:6 இத்தனை இறைக்கட்டளைகளின் எச்சரிக்கைகளையும் புறக்கணித்துவிட்டு வழிகேடுகளையே நேர்வழியாகப் போதிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

எனவே அப்படிப்பட்டவர்களின் வழி கேட்டு போதனைகளுக்கு அடிபணியாதீர்கள். குர்ஆன், ஹதீஸ் நேரடி போதனைப்படி நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி வரும் ரமழானில் ஆகஸ்ட் 10,2010 செவ்வாய் இரவு ஸஹர் செய்து ஆகஸ்ட் 11, 2010 புதன் முதல் நோன்பை ஆரம்பிக்க வேண்டும். அன்று மாலைக்குப் பின்னர் வரும் இரவில் (இன்று வழக்கத்தில் வியாழன் இரவு என்கிறார்கள்) முதல் ரமழான் இரவுத் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். செப்டம்பர் 08,2010 புதன் கிழமை 29 நோன்புகளுடன் ரமழான் நிறைவடைகிறது. அன்று இரவும் ரமழான் இரவுத் தொழுகை தொழ வேண்டும். 09.9.2010 வியாழன் “ஈதுல்பித்ர்”என்ற பெருநாளுடைய நாளாகும். அன்று நோன்பு நோற்பது ஹராமாகும்.

மவ்லவிகளின் வழிகெட்ட அறிவுரைகளை கண்மூடி ஏற்பவர்கள் 3-ம் பிறையை தலைப் பிறையாகக் கொண்டு 13.08.2010 வெள்ளிக் கிழமை நோன்பை ஆரம்பித்து பெருநாள் நாளான 9.9.2010 வியாழன் அன்று நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும், நடைமுறை யையும் புறக்கணித்து ஹராமான முறையில் நோன்பு நோற்பார்கள். கொடிய ஹராமான முறையில் சம்பளத்திற்கு மாரடிக்கும் மவ்லவி களின் வழிகெட்ட அறிவுரைகளைப் புறக்கணித்து அல்லாஹ்வின் கட்டளைப்படி குர்ஆன், ஹதீஸைப் பற்றிப் பிடிக்காத வரை முஸ்லிம்களுக்கு வெற்றியோ, ஈடேற்றமோ ஒருபோதும் இல்லை. இவ்வுலகிலும் மற்றவர்களால் இழிவுபடுத்தப்பட்டு கடுமையான துன்பங்களுக்கும் வேதனைக்கும் ஆளாவார்கள். மறுமையிலும் மிகக் கடுமையான வேதனை காத்திருக்கிறது என்பதை 7:3, 8:46, 33:21, 33:36,66,67,68 போன்ற அல்குர்ஆனின் எச்சரிக்கைகள் உணர்த்துவதை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே நபி வழிப்படி நோன்பு நோற்று, ரமழான் இரவுத் தொழுகை தொழுது அல்லாஹ்வின் மன்னிப்பையும் அருளையும் அடைய முற்படுவோமாக.

Previous post:

Next post: