ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2012 மே

M.T.M முஜீபுதீன், இலங்கை

பிப்ரவரி 2012 தொடர்ச்சி …
காலத்தை ஏசுவது பாவமாகும்:
அன்றும் இன்றும் அநேகமான மக்கள் மரணம், விபத்துகள், நோய்கள், தொழில் நஷ்டங்கள் போன்றவற்றுக்கு உட்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் எனது கெட்ட நேரம், எனது கெட்ட காலம் எனக் கூறுவதைக் காணலாம். ஒரு செயற்பாட்டை மேற்கொள்ளும்போது நேர சோதிடம் பார்க்கின்றனர். ஒரு குறித்த செயற்பாடு தவறிவிடின் நேரத்தைத் திட்டுகின்றனர். இவ்வாறு காலத்தை திட்டுவது கூடாது என முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அல்லாஹ்வின் அருளினால் சிந்தனைச் சோம்பலைத் தவிர்த்து திட்டமிட்டு முயற்சி செய்யின் இகழ்ச்சி அடையாது வெற்றியுடன் வாழ முடியும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்;ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில்தான் இரவும் பகலும் உள்ளது.
( முஸ்லிம்: 4519)

சூரியனையும், பூமியையும் படைத்து ஒரு கணக்கின்படி சுழலும்படி செய்தவன் அல்லாஹ் ஆவான். காலத்தை ஏசுவது மடமை யும், பாவமும் ஆகும். இவையாவும் சிலைகளை தெய்வமாக வணங்குபவர்களின் பண்புகளாகும். அன்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலத்தை ஏசுவதையும் தடுத்தார்கள்.

இஸ்லாத்தின் பார்வையில் சோதிடம் பார்ப்பது தடுக்கப்பட்டது:
அன்று முதல் இன்று வரை உலகில் எல்லாப் பகுதிகளிலும் கல்வி அறிவு வளர்ச்சி அடைந்து காணப்பட்டாலும் சிலைகளை தெய்வமாக நம்பிக்கை கொண்டுள்ள மக்களிடையில் சோதிடம் சார்ந்த நம்பிக்கையும் பரவலாக காணப்படுகின்றன. இது பல்வேறு தன்மைகளில் காணப்படுகின்றது. இன்று விஞ்ஞான முறைகளை அவதானித்து புவியினதும், உயிரினங்களின் இயற்கை செயற்பாடுகளை அவதானித்து, புவியில் எதிர்காலத்தில் நடைபெற இருப்பதை முன்கூட்டியே கூற முடியும். இதனை யாரும் சோதிடம் என கூறுவதில்லை. இறைவன் தனது எல்லா படைப்புகளையும் ஒரு கணக்கின்படி இயக்குவதால் இது சாத்தியமாகிறது. இதனை யாரும் மடமை என மறுப்பதில்லை. உதாரணமாக தற்போது காலை ஏழு மணியாயின் இன்னும் 12 மணித்தியாலத்தின் பின் இரவு ஏழு மணியாக இருக்கும் எனலாம். இதனை யாரும் உண்மை என அறிந்ததால் ஆச்சரியமாக நோக்குவதில்லை. பூமி அதிர்வை ஆய்வாளர்கள் முன்கூட்டி கூறும் போதும் அதனை ஏற்கி றோம். ஆனால் மனிதர்களுக்கு எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே எந்த ஆய்வு மின்றி கூறுவதை ஏற்பது மடமையாகும். இதனை அல்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் தடை செய்கின்றன. அவதானியுங்கள்.

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி(ஸல்) அவர்களிடம் “”அல்லாஹ் வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் பல (பாவ) காரியங்களைச் செய்து வந்தோம். சோதிடர்களிடம் சென்று(குறி கேட்டுக்) கொண்டிருந்தோம்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “”சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்” என்றார்கள். மேலும், “”நாங்கள் பறவையை வைத்து குறி பார்த்துக் கொண்டி ருந்தோம்” என்று நான் கூறினேன். அதற்கு நபி யவர்கள், “”அது உங்களில் சிலர் தம் உள்ளங்களில் காணும் (ஐதிகம் சார்ந்த) விசயமாகும். இது உங்களை (செயலாற்றுவதிலிருந்து) தடுத்து விட வேண்டாம்” என்று கூறினார்கள்.
( முஸ்லிம்: 4484)

நான் நபி(ஸல்) அவர்களிடம், “”அல்லாஹ் வின் தூதரே! சோதிடர்கள் (சில வேளைகளில்) எங்களுக்கு ஒன்றை அறிவிக்க, அது உண்மையாகி விடுவதைக் காண்கின்றோமே (அது எப்படி?)” என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், “”அது ஜின்னிடமிருந்து சோதிடன் எடுத்துக் கொண்ட உண்மையான சொல்லாகும். அ(ந்த உண்மையான கருத்)தை ஜின் தனது சோதிட நண்பனின் காதில் போட, அதனுடன் அவன் நூறு பொய்களைக் கூட்டி(ச் சொல்லி) விடுகிறான்” என்று பதிலளித்தார்கள்.
( முஸ்லிம்: 4485)

சோதிடனை நம்பி அறிவை இழக்காது உங்கள் அறிவைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுங்கள். முன்னைய இறைத்தூதர்களுக்கு இறக்கி அருளப்பட்ட இறைநெறி நூல்கள் மாசடைந்துள்ளன. இதன் காரணமாகவே நீங்கள் சிலைகளை தெய்வமாக வணங்குகிறீர்கள். இதன் காரணமாகவே புரோகித குருமார்களிடம் உங்கள் அறிவை அடகு வைத்து சோதிடத்தை நம்பி உங்கள் நல்ல கருமங்களைப் பின்போடுகிறீர்கள். மூடப் பழக்கங்களிலிருந்து தவிர்த்து வாழ்வதற்கு ஒரே வழி இறுதி இறைநெறி நூலான அல்குர்ஆனை அவதானித்து, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேர்வழியின் பக்கம் வந்து விடுவதாகும். அறிவைப் பயன்படுத்திச் சிந்திப்போர் உண்டா? மேலும் அவதானியுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. (முஸ்லிம்: 4488)

அன்று நபி தோழர்கள் தனது மார்க்க கட்டளைகளை எப்படி செயற்படுத்தினார்கள் என்பதை அவதானியுங்கள்.

ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர்(ரழி) அவர்களுக்கு (ஒரு எஜமானுக்கு அடிமை செலுத்த வேண்டிய சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்த அடிமையொருவன் இருந்தான். அபூ பக்கர்(ரழி) அவர்கள் அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டு வந்தார்கள். ஒரு நாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூபக்கர்(ரழி) அவர்கள் சிறிது உண்டார்கள். அப்போது அந்த அடிமை அவர்களிடம், “”இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான். அபூபக்கர்(ரழி) அவர்கள், “”இது என்ன?” என்று கேட்டார்கள். அவன், “”நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்கு குறி சொல்லி வந்தேன்; எனக்கு நன்றாக குறி சொல்லத் தெரியாது. ஆயினும், (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்கு கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்கு கூலியாக கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்” என்று சொன்னான். உடனே அபூபக்கர்(ரழி) அவர்கள் தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியயடுத்து விட்டார்கள். இவ்வாறான சோதிடம் போன்ற மடமையான செயற்பாடுகளை இஸ்லாம் கடுமையாகச் சாடுகின்றது.

சூனியம் செய்வது பெரும் பாவமாகும்:
சூனியம் அல்லது செய்வினை இஸ்லாத்தின் பார்வையில் பெரும் பாவமாகும். இது மந்திர வாதிகள் செய்யும் கண்கட்டி வித்தை; சில போலிக் குருமார்கள் ஷைத்தானின் உதவியால் சில மனிதர்களின் உள்ளங்களில் சில தடு மாற்றங்களைத் தோற்றுவித்து விடுகின்றனர். இதில் சில மோசடிகளும் காணப்படுகின்றன. ஆனால் அல்லாஹ்வின் நாட்டமின்றி எவருக்கும் எந்தத் தீங்கையும் சூனியத்தால் செய்ய முடியாது. தங்களுக்குப் பலனளிக்காத, தீங்கு தருகின்றவற்றையே அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இ(ந்தச் சூனியத்)தை விலைக்கு வாங்கிக் கொள்பவனுக்கு மறுமையில் எந்தப் பேறும் இல்லை என்பதை அவர்கள் உறுதியாக அறிந்தே இருந்தனர். (அல்குர்ஆன் 2:102)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பின்வரும் இறைவசனம் சூனியத்தில் இருந்து பாதுகாப்புத் தேடும்படியான வசனமாக உள்ளது அவதானியுங்கள்.
(நபியே!) நீர் சொல்வீராக; அதிகாலையில் இறைவனிடம் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும், இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும், இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண் டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்)
(அல்குர்ஆன் : 113:1-5)

மேலும் சில இறைவசனங்களை அவதானியுங்கள். எல்லா வகையான பாதுகாப்புகளும் ஏக அல்லாஹ்விடத்திலிருந்தே கிடைக்கின்றது. எல்லாத் தீங்குகளுக்கும் அல்லாஹ்விடமே பிரார்த்தனை செய்ய வேண்டும். இலங்கையிலும், இந்தியா-பாகிஸ்தான், சீனா, எகிப்து, ஈராக் போன்ற நாடுகளில் எந்தளவு பிரமாண்டமான சிலைகளை அமைத்து மக்கள் தெய்வமாக கருதி வழிபட்டார்கள். அவற்றினால் அல்லாஹ்வின் இயற்கைக் கால நிலைச் செயற்பாடுகளான காற்று, வெப்பம், குளிர், பனி, நீர், கடல் அலை போன்றவற்றின் தாக்கங்களிலிருந்து தன்னையே பாதுகாத்துக் கொள்ள முடிந்ததா? சிந்தியுங்கள். இவ்வாறு வணங்கப்பட்ட சிலைகள் தலை, கைகள், உடம்பு உடைந்த நிலையில் அன்னியச் செலாவணியைத் தேடித்தரும் காட்சிப் பொருளாக காணப்படுகின்றன. இப் பலவீனமான சிலைகளா உங்களைப் பாதுகாக்கும் இறைவன்? அறிவுடைய மக்களே சிந்தியுங்கள். இவ்வாறாக சிலைகளை வணங்கும் மக்களிடையே சூன்யம் செய்யும் பழக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. ஆனாலும் அவர்கள் வைத்திருக்கும் வேதத் தொகுப்புகளிலும் சூனியம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ரிக் வேதத் தொகுப்பிலுள்ள பின்வரும் இந்து வேத வசனங்களை அவதானியுங்கள்.

“”சூனியக்காரர்களுக்கு எதிராய் எரிந்திடு”, சூனியக்காரர்களையும், பேய்களின் தோழர்களையும் எரித்திடுக. (ரிக் வேதம்: 1:12:5,26)

இவ்வாறு இந்திய வேதங்கள் நம்பிக்கையுடையவர்களாகவே இருக்கின்றனர். இதே போல் கிறித்தவ, யூத மக்களும் பேய் பிசாசு, சூனியத்தின் மீது கூடிய நம்பிக்கையுடையவர்களாக உள்ளனர். அவர்களின் வேதத் தொகுப்புகள் என்ன சொல்கின்றன என்பதை அவதானியுங்கள்.

“”இரண்டகம் பண்ணுதல், பில்லி சூனிய பாவத்துக்கும், முரட்டாட்டம் பண்ணுதல், அவபக்திக்கும் விக்கிரக ஆராதனைக்கும் சரியாய் இருக்கிறது” ( சாமுவேல்: 1323).

பைபிளின்படி சூன்யம் செய்தலும், விக்கிரக ஆராதனையும் சரி சமமானது என விளக்குகின்றது. இதேபோல் அல்குர்ஆன் விளக்குவதை அவதானியுங்கள்.

(நபியே!) நீர் கூறுவீராக; மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகின்றேன். (அவனே) மனிதர்களின் அரசன்; (அவனே) மனிதர்களின் நாயன், பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகின்றேன்) அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத் தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 114:1-6)

(இறைவன் நாடினால் தொடரும்)

Previous post:

Next post: