விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2014 ஜனவரி,பொதுவானவை,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : நீங்கள் ஒட்டுமொத்த மவ்லவிகளையும் மிகக் கடுமையாக விமர்சிப்பதாகவும், அவர்களிலும் சிலர் நல்லவர்களாக 6:153 குர்ஆன் வசனக் கட்டளைப்படி நேர்வழி நடப்பவர்களாக இருக்கவும் கூடும் எனப் பலர் உங்களைக் குறை கூறுகிறார்கள். இதற்கு உங்களின் விளக்கம் என்ன? ஷாஜஹான், சுப்ரமணியபுரம்.

விளக்கம்: அந்நஜாத் ஒவ்வொரு மாத இதழின் 2-ம் பக்கத்தில் “”மார்க்கத்தை உள்ளது உள்ளபடிச் சொல்லும் அரபி மொழி ஆணவம் பேசாத, மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளாத நபிமார்களின் வாரிசுகளை விமர்சிக்காமல் முழு மரியாதை செலுத்துகிறோம்” என்று தொடர்ச்சியாக எழுதி வருவதை நீங்கள் பார்க்கலாம். இப்போது மவ்லவிகளின் எதார்த்த நிலை பற்றி அல்குர்ஆன், சுன்னா கொண்டே ஆராய்வோம்.

இந்த உம்மத்தில் நபி(ஸல்) அவர்களை விட உயர் மதிப்பை யாரும் பெற முடியாது என்பதில் முஸ்லிம்களில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவர்களின் செயல் நடைமுறைகளான சுன்னாவை ஒவ்வொரு முஸ்லிமும் பின்பற்றியே ஆகவேண்டும் என்பதை பல குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. (பார்க்க: 3:31, 32, 132, 4:59, 5:92, 8:1, 20,46, 24:54,56, 33:21,36, 47:33, 58:13, 64:12)
இந்த உன்னத நிலையில் நபி(ஸல்) அவர்கள் தன்னை குரு என்றும் தன்னைப் பின்பற்றியவர்களை சிஷ்யர்கள் என்று அறிமுகப்படுத்தினார்களா? இல்லையே! அல்லது தன்னை பீர் என்றும் தன்னைப் பின்பற்றியவர்களை முரீதுகள் என்றும் வேறு படுத்திக் காட்டினார்களா? இல்லையே! அதற்கு மாறாக 18:110 இறைவாக்கில் அல்லாஹ் சொல்லச் சொல்லிக் கட்டளையிட்டது போல் “”நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதனே!” “”உங்கள் இறைவன் ஒரே இறைவனே” என்று எனக்கு இறைச் செய்தி (வஹீ) அறிவிக்கப்பட்டுள்ளது என்று சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டி, தன்னைப் பின்பற்றியவர்களைத் தமது தோழர்கள் (அஸ்ஹாபீ) என்றே உலகுக்கு பகிரங்கமாக கட்டியம் கூறி அறிவித்தார்கள். இதை மறுக்க முடியுமா?

நபி தோழர்களில் எவரது வீட்டுக்கும் சென்று அங்கு (நஃபில்) உபரி தொழுகை தொழ நேரிட்டால் அந்த வீட்டில் தொழும்போது (முசல்லா) தொழுகை விரிப்பு விரித்ததற்கு ஆதாரம் இருக்கிறதே அல்லாமல், மஸ்ஜிதுன் நபவியில் கடமையான தொழுகையைத் தொழுவிக்கும் போது, தனக்குப் பின்னால் நின்று தொழுபவர்களிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டத் தனியாக தொழுகை விரிப்பு (முசல்லா) விரித்ததாக எவ்வித ஆதாரமும் இல்லை. ஆம்! நபி தோழர்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட நபி(ஸல்) முற்பட்டதில்லை. இதுதான் 33:21 இறை வாக்குக் கூறும் நபி(ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி. 3:31 இறைவாக்குக் கூறுவது போல் உண்மையிலே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் மட்டுமே நபி(ஸல்) அவர்களின் இந்த அழகிய முன்மாதிரியைப் பின்பற்ற முடியும். நய வஞ்சகர்களுக்கும், மறுமையை விட இம்மையை அதிகமாக நேசிப்பவர்களுக்கும் நபியின் இந்த அழகிய முன்மாதிரியைப் பின்பற்றுவது கடினமாகத் தான் இருக்கும். 17:41,45-47, 89, 22:72, 39:45 இறைவாக்குகள் கூறுவது போல் குர்ஆனின் அழகிய அறிவுரைகள் இப்படிப்பட்டவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்தும்.

இப்போது முஸ்லிம் மதகுருமார்கள் முஸ்லிம்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டப் பயன்படுத்தும் மவ்லவி, மவ்லானா, ஆலிம், அல்லாமா, ஷைகு, பீர், உலமா, ஹழரத் போன்ற பதங்கள் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

8:40, 22:78, 47:11 ஆகிய வசனங்களில் மவ்லா என்றும், 3:150, 8:40, 22:78, 66:2 ஆகிய வசனங்களில் மவ்லாக்கும் என்றும் 2:286, 9:51 ஆகிய வசனங்களில் மவ்லானா என்றும் 66:4 இறைவாக்கில் மவ்லாஹு என்றும், 6:62, 10:30 இறைவாக்கு களில் மவ்லாஹும் என்று காணப்படும் எல்லா வசனங்களையும் நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள், அனைத்தும் அல்லாஹ்வை மட்டுமே குறிக்கின்றன என்பதை உணர முடியும். ஆக, தங்களை மவ்லவி எனப் பீற்றிக் கொள்ளும் இவர்கள் அல்லாஹ்வைச் சேர்ந்தவர்கள் என்றும், அவாம்கள் ஷைத்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் பெருமை கொள்கிறார்கள் போலும். அடுத்து “”மவ்லானா” என்று தங்களைப் பெருமையாகப் பீற்றுகிறார்கள் தங்களை அல்லாஹ்வின் அவதாரம் என மனப்பால் குடிக்கிறார்கள் போலும்.

அடுத்து 6:73, 9:94,105, 13:9, 23:92, 32:6, 34:3, 35:38, 39:46, 59:22, 62:8, 64:18, 72:26 போன்ற இறைவாக்குகளின் ஆலிம் என்றும், 29:43-ல் ஆலிமூன் என்றும், ஆலிமீன் என்று 73 இடங்களிலும், ஆலிம் என்று 140 இடங்களிலும் காணப்படுபவை அனைத்தும் ஏகன் அல்லாஹ்வை மட்டுமே குறைக்கின்றனவே அல்லாமல் மனிதர்களில் எவரையும் குறிப்பிடவில்லை. ஹாழிர் என்ற அரபி பதத்தை 18:49, 46:29 இறைவாக்குகளைப் படித்து உணர்கிறவர்கள் அதிசயிக்கத்தக்க வகையில் ஒன்று ஆஜராவதைக் குறிக்கிறது. இந்து மதகுருமார்கள் சன்னிதானம், அவதாரம் என்று கூறுகிறார்களே அதையே முஸ்லிம் மதகுருமார்கள் ஹழரத்-ஹஜ்ரத் என்று தங்களைத் தாங்களே கூறுகிறார்கள். உலமா என்று 26:197, 35:28 ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் காணப்படுகிறது. அவை வருமாறு: “”பனூ இஸ்ராயீல்களின் உலமாக்கள் இதை அறிந்திருப்பது அவர்களுக்கு அத்தாட்சியன்றோ?” (26:197)

“”….அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோரே உலமாக்கள். அல்லாஹ்வே மிகைத்த வன், மிக்க மன்னிப்பவன். (35:28)

இந்த இரண்டு இறைவாக்குகளைக் காட்டித் தங்களை உலமாக என்று சொல்ல அனுமதி இருக்கிறது என்பது அவர்களின் தவறான கூற்றாகும். உண்மையில் இந்த ஆலிம்களுக்கு அல்லாஹ்வின் அச்சம் இருக்குமானால் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நன்கு அறிந்த நிலையில் (பார்க்க: 2:146, 6:20) நிராகரித்து விட்டு 21:92, 23:52 இறைவாக்குகள் கூறும் ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தை 3:103,105, 6:153,159, 21:93, 23:53-56, 30:32, 42:13,14 போன்ற எண்ணற்ற குர்ஆன் கட்டளைகளை நிராகரித்த ஷிஆ, அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத், ஹனஃபி, மாலிக்கி, ஷாஃபி, ஹன்பலி என மத்ஹபுகளாகவும், காதிரியா, ஷாதுலியா, நக் ஷபந்தியா, சுஹ்ரவர்தியா என தரீக்காக்களாகவும், ஜாக், ததஜ, இதஜ, உதஜ,அஇதஜ, ஸலஃபி, ஸலஃபி மின்ஹஜ் என பல இயக்கங்களாகவும் கூறுபோட்டு அற்ப உலகியல் ஆதாயங்களை அடைவார்களா? இப்படிப்பட்டவர்களை மவ்லவிகள், ஆலிம்கள் அல்லாமாக்கள் என நம்பி அவர்கள் பின்னால் செல்வதை விட கண்மூடித்தனம்(தக்லீத்) வேறு இருக்க முடியுமா?

மவ்லவி, ஆலிம் என பெருமை பேசாத, நபி(ஸல்) அவர்கள் தன்னோடு இருந்தவர்களைத் தனக்குச் சமமாகத் தனது தோழர்கள் என்று சொன்னது போல், சமுதாயத்தை ஆலிம்-அவாம் எனக் கூறுபோடாமல், சமமாக நினைக்கும் மவ்லவி, மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ளாத மவ்லவி, குர்ஆன், சுன்னா அவாம்களாகிய சாதாரண மக்களுக்கு விளங்காது, மவ்லவிகளாகிய நாங்கள் தான் விளக்க வேண்டும் என்று சொல்லாத மவ்லவி, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களின் தாய் மொழியில் கொடுக்கப் பட்ட குர்ஆன் மொழி பெயர்ப்பைப் படித்து, அல்லது படிக்கக் கேட்டு மார்க்கத்தைச் சரியாக, தெளிவாக விளங்க முடியும் என்று பகிரங்கமாக மக்களுக்கு அறிவிக்கும் மவ்லவி, எந்த நிலையிலும் யாரையும் தக்லீது செய்யாதீர்கள், என்னையும் தக்லீது செய்யாதீர்கள், நேரடியாக குர்ஆன், சுன்னாவைப் பார்த்து விளங்கி அதன்படி நடக்க முடியும், அதற்கு முன்வாருங்கள் என்று மரியாதைக்குரிய 4 இமாம்கள் அறிவித்தது போல் பகிரங்கமாக அறிவித்து அழைப்பு விடுக்கும் மவ்லவி, இப்படி ஒரேயயாரு மவ்லவியையாவது காட்டுங்கள். கடந்த ஐம்பது வருட சொந்த அனுபவத்தில் நாம் தேடிப்பார்த்தவரை ஒரேயொரு மவ்லவியையும் நம்மால் பார்க்க முடியவில்லை. மவ்லவிகள், ஆலிம்கள், மதகுருமார்கள் அனைவரும் சட்ட விரோதமாகத் திருட்டுத்தனமாக, இறைவனது எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முற்றிலும் முரணாக இறைவனுக்கும், இறைவனது அடியார்களுக்குமிடையில் இடைத்தரகர்களாக, புரோகிதர்களாகப் புகுபவர்களே, திருடனை விடக் கேடுகெட்டத் திருடர்களே.

இந்த வானத்தின் கீழ் இவர்களை விட கேடுகெட்ட ஒரு படைப்பு இல்லவே இல்லை. இதை நாம் சொல்லவில்லை. ஏகன் இறைவனின் இறுதி வாழ்க்கை வழிகாட்டும் நூல் அல்குர்ஆன் 7:175லிருந்து 179 வரையுள்ள வசனங்களும், 47:24-26 வசனங்களும், பைஹகி 1908 ஹதீஃதும் நெத்தியடி யாகக் கூறுகின்றன. இப்போது சொல்லுங்கள் மவ்லவி, ஆலிம், அல்லாமா, ஹழரத் எனப் பெருமை பேசுபவர்களில், ஒன்றுபட்ட ஒரே முஸ்லிம் சமுதாயத்தை ஆலிம்-அவாம் எனக் கூறுபோட்டு மக்களை வஞ்சித்து வயிறு வளர்ப்பவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று சிலர் கூறுவதை ஏற்க முடியுமா? சிந்தித்து முடிவுக்கு வாருங்கள்.

Previous post:

Next post: