சுற்றுச் சூழலை காக்க…, காகம் கற்றுத் தந்த பாடம்

in 2015 அக்டோபர்

 எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7.

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ் படைத்த அனைத்து உயிரினங்களுக்கும்  மரணம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இத்தகைய தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வில் மரித்தவை மண்ணோடு மக்கிப் போவதும் இயற்கையாக நடந்து கொண்டே இருக்கிறது. உயிரினங்களில் மனிதன் மட்டுமே இறந்த உடலை முறையாக எரித்தோ அல்லது புதைத்தோ அடக்கம் செய்கிறான். வனங்களிலும் நீர்நிலைகளிலும் வாழும் உயிரினங்கள் இறந்தபின் மண்ணோடு மண்ணாகக் கலந்து மறைந்து போகின்றன.

மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரையிலான வழிகாட்டல்களை இஸ்லாம் வழங்கி உள்ளது. இறந்த சடலங்களைக் குளிப்பாட்டி சுத்தம் செய்து அதற்குரிய இடத்தில் நல்லடக்கம் செய்வது முஸ்லிம்களின் கடமை. இதே போல் யூத, கிறிஸ்தவ மதங்களிலும் எரிப்பதை விடப் புதைப்பதே பின்பற்றப்படுகின்றது. இந்து மதத்தில் எரிப்பதும் புதைப்பதும் நடைமுறையில் உள்ளது. பார்சி மதத்தவர்கள் இறந்த உடல்களை அப்படியே உயரமான கோபுரத்தில் வெட்டவெளியில் கழுகுகள், மற்றும் பறவைகளுக்கு உணவாக போட்டு விடுகின்றனர்.

இறந்தவர் குடும்பத்தினரின் நிதிநிலையைக் கணக்கிட்டால் சடலத்தை எரிப்பதற்கான செலவு, புதைப்பதற்கு ஆகும் செலவை விட அதிகமே. பிணம் நன்றாக எரிவதற்கு சுமார் 1600 முதல் 2000 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் தேவைப்படும் . இதற்கான கருவிகளின் விலையும் அதிகம் மின்மயானங்கள் கிராமப் பகுதிகளில் இல்லாமல் நகர்ப்புறங்களில்தான் இருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் எரியூட்டத் தேவையான மின்சாரம் நகர்ப்புறங்களில் மட்டுமே தடையின்றிக் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.
சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டால் மனித உடல் எரியூட்டப்படுவதால் எழும் புகை மற்றும் மாசுக்களால் சுற்றுப்புறச் சூழல் கெடுகின்றது. புதைப்பதால் நாற்றமெடுத்த சவம் கூட மண்ணுக்குள் அடங்கிவிடும். ஆனால் எரியூட்டப்படுவதால் எழும் நாற்றம் பல மைல் தூரங்கள் வரை காற்றில் பரவி ஆரோக்கியமான காற்றை மாசுபடுத்த வாய்ப்புகள் அதிகம். ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் கண்கானிப்பு அமைப்பின் Persistent Organic Pollutants (POP) அறிக்கையின்படி பிணம் எரியூட்டப்படுவதால் கொடிய விஷத்தன்மையுள்ள நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, அமில மழைக்குக் காரணமான கந்தக டையாக்சைடு ஆகியவை வெளியேறுகின்றன. பிண எரிப்பால் வெளியாகும் டையாக்ஸினின் அளவு 0.2%. உலகின் பெரும்பாலான பகுதிகளில் பிணங்களை புதைப்பதே வழக்கத்தில் உள்ளதால் இந்த அளவு ஓரளவு கட்டுக்குள் உள்ளது.

india-varanasi-city-of-light-banaras-ganges-holy-bodies-cremation-ghats-cremationபல லட்சம் இந்தியர்களின் ஜீவநதியாக விளங்கும் கங்கை,இந்துக்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது.இந்த நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்,தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நதியில் மூழ்கி எழுகின்றனர்.அதே சமயம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுவதாலும், தினமும் இறந்தவர்களின் அஸ்தியை அங்கு கரைப்பதாலும் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து, மாசுபட்டு வருகிறது.

தற்போது கங்கை நதிக்கு செல்பவ்ர்கள் புனித நீராடலாம் என்று மூழ்கி எழுந்தால், அவர்களை உரசிக்கொண்டு ஒரு பிணம் மிதந்து செல்வதை சர்வ சாதாரணமாக காணலாம். நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த அளவுக்கு மாசடைந்துபோயிருக்கும் கங்கை நீரில், புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens) எனப்படும் காரணிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இப்படி மத நம்பிக்கையின் அடிப்படையில் பிணங்களை எரிப்பதாலும் நீர்நிலைகளில் எறிவதாலும் சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுவது அனைவரும் அறிந்த ஒன்று.ஆனாலும் இந்தியாவைத் தவிர்த்து உலகளாவிய நடைமுறையினை பார்க்கும்போது  கூட புதைக்கும் பழக்கமே இன்றும் பரவலாக இருப்பதை அறியலாம்.இப்படி இறந்தவர்களை புதைப்பதுதான் சிறந்தது என்று மனிதனுக்கு யார் சொல்லிகொடுத்தது என்று பார்க்கும்போது, ஆச்சரியம்! ஆதி மனிதனுக்கு இதைக் கற்றுக்கொடுத்தது ஒரு காக்கை.

மனிதர்களின் தந்தை,ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களுக்கு இரண்டு மகன்கள்,இவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் குர்பானி கொடுத்தபோது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னர்)”நான் நிச்சயமாக உன்னை கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்க்கு (முன்னவர்)”மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக்கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்துதான்” என்று கூறினார்….      அல் குர்ஆன்.5:27.

(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் தம் சகோதரரைக் கொலை செய்து விட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகி விட்டார்.

பின்னர் தம் சகோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமேன்பதைக் அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோன்றிற்று (இதைப்பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகிவிட்டார்.”    அல் குர்ஆன்.5:31,32.

அல்லாஹ்வின் படைப்பில் ஏராளமான ஜீவராசிகள் இருக்கும்போது, காகத்தை ஏன் அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்? உண்மையில் அல்லாஹ் படைத்த பறவை இனங்களில்  காக்கைக்கு மட்டும் கூடுதல் புத்தி கூர்மையை அல்லாஹ் கொடுத்துள்ளான்.இதை இன்றைய நவீன ஆய்வுகள் உண்மைப்படுத்தியுள்ளன.காகத்தின்  மூளையானது பிற பறவைகளின் மூளை அமைப்பை விட மேம்பட்டதாக உள்ளது.

University of Iowa. “No ‘bird brains’? Crows exhibit advanced relational thinking, study suggests.” ScienceDaily. ScienceDaily, 18 December 2014. <www.sciencedaily.com/releases/2014/12/141218131427.htm>.

பறவைகளில் அதிக அறிவுத்திறமை உள்ள பறவை காகம் என்பது அறிஞர்களின் ஆய்வு முடிவு.இந்த அறிவுத்திறமைக்கு காரணம் அதன் மூளைப்பகுதியில் அமைந்துள்ள “நிடோபோடோலியம்” ஆகும். அமெரிக்க,கனடாவில் வாழும் ஜாக்டா காகங்களின் மூளைப் பகுதியில் அமைந்துள்ள “நிடோபோடோலியம்” மனிதன் மற்றும் சிம்பன்ஸி “நியோகார்டெக்ஸ்”பகுதிக்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது. மனிதக்குரங்கு சிம்பன்ஸியைவிட பெரிதான “நிடோபோடோலியம்”காக்கைக்கு உள்ளது.காகத்தின் அளவில் உள்ள உயிரினங்களோடு காகத்தை ஒப்பிடும்போது இதனுடைய மூளையே பெரிது.

காகங்களின் புத்திகூர்மையை நம்மில் பலர் பார்த்தறிந்திருப்போம். பஞ்ச தந்திரக்கதையில் தாகத்தைத் தனித்துக்கொள்ள பானையின் அடியில் கிடக்கும் நீரின் மட்டத்தை உயர்த்த சிறு கற்களை போட்ட காகத்தைப்பற்றி பள்ளியில் படித்திருபோம். எல்லா அறிவையும் பெற்றிருக்கிறோமென்ற இறுமாப்புடன் இருக்கும் மனிதர்களாகிய நமக்கு, நம் இனத்தையல்லாத உயிரினங்கள் இயல்பாகச் செய்யும் ஒரு சில செயல்கள் நாம் செய்வதை ஒத்திருப்பது நம்மை வியக்க வைக்கும்.

கற்கால மனிதன் தீயூட்ட சிக்கிமுக்கிக் கற்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தினான். இப்படி கருவியை உருவாக்கவும் அதைப் பயன்படுத்துவதும், இவ்வுலகில் மனிதர்கள் அல்லாத உயிரினங்களில் காகமும் ஒன்று. ஆப்பிரிக்காவிலுள்ள சிம்பன்சிகளையும், அமெரிக்காவில் தென்படும் கடல் நீர்நாயையும் (Sea Otter) மற்ற உதாரணங்களாகச் சொல்லலாம்.

கேலிடொனியன் காகம் (Caledonian crow) என்ற வகைக் காகம் காட்டில் விழுந்து கிடக்கும் பெரிய மரங்களின் இடுக்குகளில் இருக்கும் புழுக்களையும் பூச்சிகளையும் குச்சியை வைத்து பிடிக்கின்றன. கீழே கிடக்கும் குச்சிகளை தமது அலகால் பிடித்து மர இடுக்குகளில் குத்திக் குடையும் போது, அதனுள்ளே இருக்கும் புழுக்கள் எரிச்சலில் அக்குச்சியை தமது வாயுறுப்புகளால் கவ்வுகின்றன. உடனே இக்காகம் குச்சியை வெளியே எடுத்து அதில் மாட்டியுள்ள இரையை பிடித்துச் சாப்பிடுகின்றன. இரை மரத்தினுள் அமைந்திருக்கும் ஆழத்திற்கேற்ப குச்சியின் அளவையும் தேர்ந்தெடுக்கும் திறன் வாய்ந்தவை இக்காகங்கள்!

ஜப்பானில் இருக்கும் ஒரு வகையான அண்டங்காக்கைகள் அங்குள்ள ஒரு நகரத்தில் வாழ்க்கை நடத்துவதற்கான நெளிவு சுளிவுகளை நன்கு கற்றுத் தேர்ந்துவிட்டன. கொட்டைகளை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பை சாப்பிட இக்காகங்கள் நாம்மை ஆச்சர்யப்படவைக்கும் நூதன முறையை கையாள்கின்றன. வாகனங்கள் விரைந்து செல்லும் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு சிக்னலின் மேலிருந்து தமது அலகால் கடித்து உடைக்க முடியாத கொட்டைகளை கீழே போடுகின்றன. வாகனங்களின் சக்கரத்தில் அரைபட்ட கொட்டைகளிலிருந்து பிறகு பருப்பினை எடுத்துச் சாப்பிடுகின்றன. அதுவும் எப்போது? பாதசாரிகள் நடந்துசெல்வதற்கான விளக்கு எறிந்தவுடனே தான். இல்லையெனில் வாகனங்களில் அடிபட நேரிடுமே! சிவப்பு விளக்கு எரியும்போது வாகனங்கள் வராது என்ற உண்மையை  அக்காக்கைகள் அறிந்துள்ளன.

மனிதர்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்த காகத்தின் வாழ்க்கையில், மனிதர்களோடு அதன் தொடர்பு பல விதங்களில் உள்ளது.மனிதனோடு அது பழகியது போலும் நடந்து கொள்ளும்,பழகாதது போலும் நடந்து கொள்ளும் கள்ளமுள்ள காக்கை.நமக்குள் என்ன நினைப்பு உருவாகிறது என்பதைக் கண்டு பிடித்துவிடும்.அதனால்தான்,”காக்கை நோக்கறியும்” “கொக்கு டப் அறியும்!” என்று சொல்லப்படுகிறது.

எந்தப் பறவையும் தனது எதிரி மேலே இருந்து வருமா என்று கவனிப்பதில்லை.காக்கை ஒன்றுதான் மேலே பார்க்கும்.அதை நாம் கண் சாய்த்து அல்லது ஒருசாய்த்து பார்க்கிறது என்கிறோம்.உலகெங்குமுள்ள மக்களின் பண்பாட்டில் காகத்திற்கு ஓர் இடம் உண்டு.காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.இந்து மதத்தில் இறந்த முன்னோர்கள் காகம் உருவில் வருவதாக ஐதீகம்.ஆகவே காக்கைக்கு உணவு வைத்த பின்பே அநேகர் சாப்பிடும் வழக்கம் இன்றும்முள்ளது.

காகங்கள் குறித்த ஆய்வில்,இவை மனிதர்களின் முக அமைப்பைக்கொண்டு அவர்களை அடையாளம் காணும் திறமை உள்ளதாக அறிந்தனர். மேலும் மனிதர்கள் கடைபிடிக்கும்  பல நல்ல பண்புகள் காகத்திடம் உள்ளது.அதிகாலையில் எழுந்து கரைதல்.கிடைத்த உணவை தானே தின்னாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்துண்ணுதல்.

உணவு உண்ணும்போதே பாதுகாப்பாக சுற்றும் முற்றும் பார்த்தல்;பிறர்  காணாமலே இணை சேருதல்;இதைத்தான் “காக்கை காணாமலே புணரும்” (அதுவும் மனிதர்களைப்போல் முகம் முகமாய்) என்பார்கள்.மாலையிலும் குளித்தல்; ஒரு காக்கை இறந்தால் அனைத்து காக்கைகளும் ஒன்று சேருதல்.இப்படிப் பல  பொதுப் பண்புகள் மனிதர்களுடன் ஒத்துள்ளது. ஆகவேதான் பகுத்தறிவு என்னும் ஆறறிவு கொடுக்கப்பட்ட மனிதனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க அவனுக்கிணையான புத்திசாலித்தனம் நிரம்பிய காகத்தை அல்லாஹ் தேர்வு செய்துள்ளான்.அல்லாஹ் அறிந்தவன்!

இன்னும்,இந்த குர் ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.   அல் குர்ஆன்.39:27.

Previous post:

Next post: