முஸ்லிம்களுக்கு எதிராக குறிவைத்தல்!

in 2019 பிப்ரவரி,தலையங்கம்

அந்நஜாத்  பிப்ரவரி 2019

ஜ.அவ்வல்-ஜ.ஆகிர் 1440

தலையங்கம்!

முஸ்லிம்களுக்கு எதிராக குறிவைத்தல்!

உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக குறி வைக்கப்படுகிறது என்பது இஸ்லாத்திற்கு புதிதல்ல-முஸ்லிம்களுக்கும் புதிதல்ல. இது அன்றிலிருந்து இன்று வரை தொடர் நிகழ்வாகிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

சீன அரசு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கைது செய்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பரவலாக செய்தி வந்து கொண் டிருந்தது. செய்தியின் உண்மைத் தன்மை தெரியாததால் முஸ்லிம்களில் பெரும்பாலோனோர் அச்செய்தியை ஃபார்வர்ட் செய்யாமல் இருந்தனர். இதே செய்தியை ஐ.நா.சபை சமீபத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், சீன அரசு முற்றிலுமாக இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. சீன அரசின் மறுப்பு தவறாக இருக்குமோ என்று அந்த அரசின் செயல்பாடுகள் வேறுவிதமாக இருப்பதிலிருந்து அறிய முடிகிறது.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம் மாணவர்கள் நோன்பு நோற்பதை சீன அரசு தடை செய்திருந்தது. சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் உள்ள “உய்குர்” என்ற இனத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் சில உரிமைகளுக்காகப் போராடினர். அடக்கு முறைகளைக் கையாளும் ஒரு கம்யூனிச நாட்டில் உரிமைகளைக் கேட்க முடியுமா? அதற்காக போராட முடியுமா? இதன் தொடர்ச்சியாக சீன அரசு அந்நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் குறிவைத்தலை அரங் கேற்ற முயற்சித்துள்ளது. அதுவும் சட்டத்தின் மூலமாக! அங்குள்ள முஸ்லிம்களை சீன கலாச்சாரத்திற்கு மாறுமாறு சட்டம் இயற்றியுள்ளனர்.

ஆம்! சீன அரசு புது சட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புது சட்டம் மூலமாக, அரசியல்-அறிவியல்-மதம்-தொழில்-வாழ்க்கை-கல்வி என இன்னும் உள்ள அனைத்து வழிகளிலும் சீன மயமாக்குதலை 5 ஆண்டுகளில் அனைத்து சமூகத்தினர் மீது செயல்படுத்த முயல்கிறது. இதற்காக முதன் முதலாக குறிவைக்கப்பட்டது முஸ்லிம் சமூகத்தின் மீதுதான்!

முஸ்லிம்கள் தொழுவதற்கும், நோன்பு நோற்பதற்கும், ஆண்கள் நீளமான தாடி வைப்பதற்கும், பெண்கள் பின்பற்றும் “ஹிஜாப்” எனும் பர்தா அணிவதற்கும் இப்போது தடை விதித்துள்ளது.

முஸ்லிம்கள் சீன கலாச்சாரத்திற்கு மாறுவதற்கு பயிற்சி அளிக்கவும், வழிகாட்டவும் சீன அதிகாரிகள் தயாராய் இருப்பதாக சீனாவின் அதிகாரப்பூர்வ “குளோபல் டைம்ஸ்” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாக “தி இந்து” (தமிழ்) கூறுகிறது.

நம் இந்திய தாய்நாட்டில் முஸ்லிம்கள் மீது குறிவைத்தல் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருப்பது உலகம் அறிந்த உண்மை. முஸ்லிம் பெண்களை புர்கா அணிய நிர்பந்தம் செய்யக்கூடாது. குழந்தைகள் அனுமதி இல்லாமல் கத்னா என்ற விருத்தசேதனம் செய்யக்கூடாது முஸ்லிம் பெண்களை பள்ளிவாசலுக்கு அனுமதிக்க வேண்டும் ஆகிய விஷயங்களுக்காக இந்து மகா சபை வழக்கு தொடரப் போவதாக செய்தி ஒன்று சமீபத்தில் குறிப்பிட்ட சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்துமே சம்பந்தப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமின் விருப்பத்தின் பேரில்தான் தொன்றுதொட்டு இஸ்லாம் மார்க்கத்தில் நடந்து வருகிறது என்ற உண்மை இதன் மூலம் மறைக்கப்பட்டு, நிர்பந்தத்தின் பேரில் நடப்பதாக ஒரு மாயையைத் தோற்றுவிக்க முயலும் முயற்சியே இது.

மதுரை ஆதினம் அவர்கள் முன்பொரு முறை மேடைப்பேச்சு ஒன்றில் கூறிய கருத்துக்களின் சாராம்சத்தை இங்கு நினைவிற்கு கொண்டு வருவது அவசியமாகிறது. நான் போட்டிருக்கின்ற உத்திராட்ச மாலை மற்றவர்கள் உடலை உறுத்துகிறது என்றால் பிறருக்கு தொல்லைத் தரும் அந்த உத்திராட்ச மாலையை நான் போடக்கூடாது. முஸ்லிம் ஒருவர் போட்டிருக்கின்ற தொப்பி மற்றவர்கள் தலையை உறுத்துகிறது என்றால் பிறருக்கு தொல்லைத் தரும் அந்த தொப்பியை அந்த முஸ்லிம் போடக்கூடாது. இரண் டுமே நடக்காதபோது அவருடைய தொப் பியை மட்டும் ஏன் சிலர் பிரச்சனை ஆக்க வேண்டும்? என்று வினா எழுப்பினார்.

முஸ்லிம்களின் தாடியும், புர்காவும், நோன்பும், தொழுகையும் முஸ்லிம் அல்லாதவர்களை துன்புறுத்துகிறதா? இல்லையே! அப்படி இருக்க முஸ்லிம்கள் மீது ஏன் இந்த ஈனத்தனமான துவேஷம்? இந்த நியாயத்தை சீன அரசும் மற்றும் முஸ்லிம்களை குறிவைக்கும் பிறரும் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்றால், குறி வைத்தலுக்குப்பின் ஏதோ சதித்திட்டம் பின்னப்பட்டிருக்கிறது என்பது மட்டும், நடைபெறுகின்ற நிகழ்வுகளிலிருந்து தெளிவாகிறது. இவர் களின் சதித்திட்டங்களை முறியடித்து, சம் பந்தப்பட்டவர்களைக் கேவலப்படுத்த எங்கள் இறைவன் போதுமானவன் என்பதை “அல்லாஹ், சதி செய்பவர்களுக்கெல்லாம் மேலானவன்” என்ற 3:54 குர்ஆன் வசனம் முஸ்லிம்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள் என்று அற்பத்தனமான பிரச் சாரத்தை இஸ்லாம் மீது துவேசம் கொண்டுள்ளவர்கள் நம் இந்திய நாட்டில் நிகழ்த்துவது போல, உலகிலுள்ள இஸ்லாமிய நாடுகள் சீன பொருட்களை வாங்கக் கூடாது என்றோ, தமது நாடுகளின் வர்த்தக சந்தை களில் சீனாவுக்கு இடமளிக்கமாட்டோம் என்றோ பிரச்சாரம் மேற்கொண்டிருந்தால் சீனா உலக அரங்கில் இன்று இந்த அளவுக்கு நிமிர்ந்து நின்றிருக்குமா? நிச்சயம் வீழ்ச்சி அடைந்திருக்கும்.

முஸ்லிம் நாடுகள் அப்படி ஒரு நிலையை மேற்கொள்ளாததற்கு காரணம் என்ன தெரியுமா? அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் கடும் எதிரியாக இருந்த யூதர்களிடம் வர்த்தகம், வர்த்தகம் சார்ந்த அல்லது சாராத கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டு, அவரின் சமூகத்தினரான உலகில் உள்ள எல்லா முஸ்லிம்களுக்கும் ஒரு அழகிய முன்மாதிரியைக் காண்பித்துச் சென்றிருக்கிறார்கள். எனவே, முஸ்லிம்களின் மீது குறி வைக்கும் சதித்திட்டம் அத்தனையையும் அல்லாஹ் தவிடு பொடியாக்கி, அவர்களை கேவலமாக்கவும் செய்வான் என ஒவ்வொரு முஸ்லிமும் நம்பிக்கைக் கொண்டுள்ளோம் என்பதை உலகம் அறியட்டும்.

Previous post:

Next post: