உடல் நலம் பேணுவது எப்படி?

in 2012 நவம்பர்,பொதுவானவை

பஷீர் அகமது, புதுக்கோட்டை.

நாம் பரபரப்பான வாழ்க்கையில் சுழன்று கொண்டிருக்கிறோம். பொருளாதார தேடலுக்கு நேரம் அதிகம் தேவைப்படுகிறது. வாரத்தில் கிடைக்கும் ஒரு நாள் ஓய்வை கூட கல்யாணம், விருந்து என்று ஓடி விடுகிறது. அவ்வப்பொழுது நடக்கும் உறவினர் வீட்டு மவுத் நிகழ்வுக்கு கூட, நம்மில் பலர் ஏதோ வருகை பதிவேட்டில் Attendenace கையயழுத்து போடுவது போல போய் தலையை காண்பித்துவிட்டு ஓடி வந்து விடுகிறார்கள். மனித நேயங்களை தொலைத்து, வாழும் வாழ்க்கைக்கு நாம் பழகி விட்டோம். அதனால் தானோ என்னவோ மையத்துகள் அடக்கம் செய்யப்பட்ட பிறகு உறவினர்களை Formality  மீட்டிங் பண்ணி விட்டு திரும்பி விடுகிறோம். அதைப் போல நம் உறவினர் யாரும் நோய்வாய் பட்டிருந்தால், போய் பார்க்க வேண்டும், இல்லை என்றால் நம்மை தப்பாய் நினைப்பார்கள் என்று உறவினர்களை Formality  மீட்டிங் பண்ணி விட்டு திரும்பி விடுகிறோம்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, கொஞ்சம் கண்ணை மூடி யோசியுங்கள். மேலே படித்த மாதிரி உங்களின் வாழ்க்கை இருந்தால், நம்மை மறு சீரமைக்க வேண்டியது கட்டாயம். நமது வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கப்பட வேண்டும். நமது எண்ணமும் செயலும் ரசூல் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் புணர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். எப்படி என்றால் ஒரு சின்ன விஷயத்தை இங்கே எடுத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் உறவினர் அல்லது நண்பர் யாரும் நோய்வாய்ப் பட்டிருக்கும் தருணத்தில் அவர்கள் வீட்டுக்கு (Visit)  போய் வந்திருப்பீர்கள். அத்தருணங்களில் எத்தனை தடவை கீழ்கண்ட துஆவை அங்கே ஓதி பிரார்த்தனை செய்தீர்கள்? உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டித் தந்துள்ள வாழ்வியல் எத்துணை மனித நேயம் மிக்கது என் பதை அந்த துஆக்களை நோயாளியின் அருகில் இருந்து ஓதினால் உணர முடியும்.

நோயாளியை நலம் விசாரிக்கும்போது:
எந்தக் குற்றமும் இல்லை; அல்லாஹ்
நாடினால் (இந்நோயினால் பாவம்) பரிசுத்த மாகும். நூல்: பத்ஹுல் பாரி: 10:118

மிகப்பெரிய சிம்மாசனத்தை உடையவ னாகிய மகத்துவமிக்க அல்லாஹ்விடம் உமக்கு ஆரோக்கியத்தை நல்குமாறு நான் கேட்கிறேன்.
நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்.

யா அல்லாஹ்! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன், உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! நூல்: புகாரி 5742.

கவலை வேண்டாம் அல்லாஹ் நாடினால் குணமாகிவிடும். நூல்: புகாரி 3616.

மரணத்திற்கு நிகரான துன்பத்தின்போது:
யா அல்லாஹ்! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்!
நூல்: புகாரி 5671, 6351

மரணத்தை அறிந்த நோயாளிக்கு:
யா அல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு அருளும் செய்வாயாக! மிக்க உயர்ந்தோனாகிய நண்பனுடன் என்னை நீ சேர்த்தும் வைப்பாயாக!
நூல்கள்: புகாரி 7/10, முஸ்லிம்: 4/1891

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; நிச்சயமாக மரணத்திற்குப் பல சங்கடங்கள் உண்டு. நூல்: பத்ஹுல் பாரி.

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அல்லாஹ்வே மிகப் பெரியவன்; வணங்கப்படுபவன் அல்லாஹ்வை யன்றி (வேறு) இல்லை; அவன் தனித்தவன் அவனுக்கு இணை இல்லை; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; ஆட்சி அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; (பாவத்திலிருந்து திரும்புதலோ நன்மையைச் செய்ய) சக்தியோ அல்லாஹ்வை கொண்டல்லாது இல்லை.
திர்மிதீ, இப்னுமாஜா.

சமீபத்தில் சகோதரர் PJ  அவர்கள் தான் நோய்வாய்ப்பட்டிருக்கும் செய்தியை அறிவித்துள்ளதைப் படிக்கும்போது, நம் மனம் சற்று தடுமாறியது. அவருக்காக துஆ செய்கிறோம்.. அவர் மீது உள்ள கருத்து வேறுபாடுகள் தனி விஷயம். அதையும் மனித நேயத்தையும் குழப்பிக் கொள்ள கூடாது. காரணம் PJ  அவர்களின் உடல்நலக் குறைவை சிலர் கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

ஒரு மனிதனுக்கு உலகில் வரும் நோயை வைத்து அவனுக்கு இறைவன் தண்டனை கொடுத்துள்ளான் என்று யாராவது பேசினால் அந்த மனிதன் அல்லாஹ்வின் அதிகார வரம்பில் கை வைக்கின்றான் என்று அர்த்தம். அதாவது ஒரு வகையான ´ஷிர்க் மனோ பாவத்தில் இருப்பதற்குச் சமம். அதேபோல ஒரு மனிதன் செல்வ செழிப்பில் சுகபோகத்தில் மிதக்கும்போது இறைவன் அந்த மனிதனுக்கு பரிசளிக்கின்றான் என்று பேசுவதும் சரியான பார்வை அல்ல.

இறைவன் தான் நாடுபவர்களுக்குக் கொடுப்பான், தண்டிப்பான், எப்படி, எப்போது என்பதெல்லாம் வல்ல ரஹ்மானின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள விசயங்கள். யார் நோய்வாய்ப்பட்டாலும் அவர்களுக்காக, துஆ செய்வது கலிமா சொன்ன அனைவர் மீதும் கடமையாகும். இந்த விசயத்தில் சகோதரர் PJ  அவர்கள் தமக்கு நோய்வாய்ப்பட்டிருக்கும் செய்தியை இணையத்தில் கடிதம் வாயிலாக சொன்ன வார்த்தைகளில் “”தமது அமைப்பை கட்டி காக்கும் இயக்க வெறி அப்பட்டமாக” தெரிகிறது.

நான் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அடுத்த நிமிடம் உளவுத்துறைக்கு தெரிந்து எதிரிகளின் இயக்கங்களுக்கும் உடனே தெரிந்து விடும். அவர்கள் வழியாக நம் நிர்வாகிகளுக்குத் தெரிய வரும்போது அது ஜமாஅத்தைப் பாதிக்கும். இந்த வரிகள் PJ  யால் எழுதப்பட்டது உண்மை என்றால் அது மாபெரும் தவறாகும்.

காரணம் சுன்னத் வல் ஜமாஅத் முதல் தப்லீக்காரர்கள் வரை பலரும் அவருக்காக துஆ செய்கிறார்கள். ஆனால் PJ  யோ எதிரிகளின் இயக்கங்களுக்கும் என்ற வார்த்தைகளைப் பயன் படுத்துகிறார். தனக்கு நோய்வாய்ப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தை அழகிய தாவா களமாக ஆக்கி கொள்ளலாம். ஆனால் அவர் தமது இயக்கத்தை கட்டிக் காப்பதில் தான் குறியாக இருக்கிறார். PJ அவர்களின் நோய் குணமாக பிரார்த்திப்போம். அவரின் தவறான புரிதல்களில் இருந்து அவர் மீளவும் பிரார்த்திப்போம்.

நமது வாழ்க்கை முறைகளில் சீரான பழக்க வழக்கங்கள் இல்லாததால் நம்மில் பலர் நோய் வாய்ப்படுகிறார்கள். உடல் நிலை பாதிக்கப்படுகிறார்கள் என்ற எதார்த்தத்தை நாம் உணர வேண்டும். நேரம் தவறாமல் குறித்த நேரத்தில் ஐவேளையும் தொழ வேண்டும் என்ற சிறப்பான கொள்கையுடைய நாம் பல விசயங்களில் எந்த நேர ஒழுங்கு கட்டுப்பாட்டையும் பேணுவதில்லை என்பதும் உண்மையாகும். வயோதிகம் வருமுன் இளமையையும், நோய் வருமுன் ஆரோக்கியத்தையும் பயன்படுத்துங்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டு தலை நாம் எப்போது பின்பற்றபோகிறோம்? சாப்பிடும் அளவுகளில் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை நாம் எப்போது பின்பற்ற போகிறோம்? இரவில் அதிகம் கண் விழித்தால் உடலுக்கு கேடு என்று தெரியும். ஆனால் இஷாவுக்கு பிறகு விரைவில் தூங்குங்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் வாழ்வியலை நாம் எப்போது பின்பற்ற போகிறோம்? நாம் சாப்பிடும் பல்வேறு உணவுகளில், கெமிக்கல்ஸ் போன்ற நச்சுகள் கலந்து உள்ளது என்று மருத்துவச் செய்திகள் சொல்கின்றன. “”நன்மையை ஏவி தீமையைத் தடுங்கள்” என்ற இஸ்லாமிய வாழ்வியலை நாம் எப்போது பின்பற்ற போகிறோம்? நிறைவாக ஒரு மருத்துவ செய்திக் குறிப்பையும் இங்கே தருகிறோம். எல்லாவற்றையும் படித்து நீங்களே உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற ஒரு நல்ல முடிவை தேர்வு செய்யுங்கள்.

நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில:
1. பலகீனமான உடலமைப்பு
2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்
3. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது
4. மது, போதைப் பொருள் பழக்கம்
5. புகைப்பழக்கம்
6. தூக்கமின்மை
7. சர்க்கரை நோய், இவை அனைத்தும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கின்றன.

Previous post:

Next post: